தனியாக போகாதே!
கணவன்
ஆறடியைக் குறைத்துக்கொண்டே அருகில் வாடி – நாங்கள்
அருகிருந்து பேசிப்பல மாதம் ஆச்சே
மனைவி
நாறடிக்க நினைக்காதே இருக்கும் வாழ்வை – ஊரில்
நாலுசனம் கண்டுவிட்டால் அனைத்தும் போச்சே
கணவன்
வாயிதழில் முத்தமிட்டே முன்பு போல – நாங்கள்
வழமைக்குத் திரும்பிடுவோம் கண்ணே வாடி
மனைவி
காயவைத்து ஐ.சி.யறை உன்னைப் போட்டு – அங்கே
காண்பதற்கும் விடமாட்டார் இப்போ வேண்டாம்!
கணவன்
முகில்மறைக்கும் நிலவெனவுன் முகத்தை மூடும் – அந்த
மூக்கிருக்கும் துணியகற்று முத்தம் தாரேன்
மனைவி
மதில்மறைக்கும் வீடெனவுன் கனவில் காண்பாய் – இந்த
மனப்பயங்கள் தீரும்வரை எதற்கு வீணாய்
கணவன்
கடைகண்ணி வீதியெலாம் சனங்கள் கூடி – முன்போல்
கனடாவில் திரிகிறதே வெளியில் பாராய்
மனைவி
தடைசொன்ன அரசிதனைச் சரிதான் என்றே – மீண்டும்
தான்சொல்லி அகற்றட்டும் வெளியில் போவோம்
கணவன்
பெருமளவு குறையுதடி உலகில் தொற்றும் – உந்தன்
பேச்சினிலே உறையுதடி எந்தன் பற்றும்
மனைவி
அருகிவரும் அவலமதில் மீண்டும் பற்றா? – ஐயோ
அடுத்தமுறை வேண்டாமே ஊசி தொற்றால்
கணவன்
காசெடுக்க வங்கிக்கு வெளியில் போறேன் – ஏதும்
கடித்துண்ண வேண்டுமடி கடையில் வாங்கி
மனைவி
கட்டியவள் எனைவிட்டுத் தனிய நீயா – ஐயோ
காரையெடு கணப்போதில் கிளம்பி வாரேன்!
கணவன்
வேறுமொரு வேலையுண்டு வெளியில் அன்பே – நீயும்
வீட்டிலிரு ஏதேனும் வாங்கி வாரேன்
மனைவி
வீட்டிலொரு வேலையுண்டு உனக்கு இன்று – நாங்கள்
விரைந்துசென்று திரும்பிடுவோம் நில்லு வாரேன்!
இரா.சம்பந்தன்