ஞானிக்கு வந்த கோபம்!
மூடர்களே நீங்கள் முகத்திலே இரண்டு கண்களை வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்த்து இறை உணர்வு பற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களே.
ஞானிகள் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பதால் நீங்கள் வென்றுவிட்டதாக நினைக்கின்றீர்களா?
ஒரு தாயிடம் அவளுடைய மகள் வந்து நேற்றிரவு பூட்டிய அறைக்குள் அப்பாவும் நீயும் சிரிப்பும் சந்தோசமுமாக இருந்தீர்களே என்ன விசயம் என்று கேட்டால் தான் கணவனுடன் அனுபவித்த சுகத்தைப் பற்றி எப்படி அந்தத் தாயால் மகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?
முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்கள்!
அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.
(திருமந்திரம் – 9 வது தந்திரம் – 2944வது பாடல்)
இந்தக் கருத்து சகல மதங்களுக்க்கும் சகல நாத்திக வாதிகளுக்கும் எல்லா இறை நம்பிக்கை உடையவர்களும் என்றும் பொருந்தக் கூடிய கோபம் மிக்க மிகக் கடுமையான உபதேசமாகும்.
இரா.சம்பந்தன்