சிவ பார்வதி நடனம்

சிவ பார்வதி நடனம்

பார்வதி:

 

பால்நினைந் தூட்டும் தாயென பதிகப்

பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன்

கால்தனில் சதங்கை காலனை உதைத்த

கடவுளே என்றுனை நாட – அன்று

ஆல்நிழல் இருந்து அறமெடுத் துரைத்த

ஐயனே எந்தன் ஈசா! – ஒரு

கோல்துணைக் கிழவி கூவிட நீயும்

கோயிலில் இருப்பதும் முறையோ?    (பால்நினைந்து)

 

அடிமுடி தேடி அலைந்தவர் முன்னால்

அனல்மலை யாகவே நின்றாய் – பெரும்

இடியென அதிரும் இடபத்தில் வந்தே

என்னையும் ஆட்சி கொண்டாய்! – தோல்

துடியொடு மழுவும் தொல்மதி மானும்

தோன்றிடும் கோலம் கண்டாய்! – இன்று

கொடியென துவளும் முதுமகள் துயரக்

குறையினை மறப்பதும் தகுமோ?       (பால்நினைந்து)

 

கரையுடை அணையைக் கட்டுதல் செய்யக்

காவலன் ஆணையாம் அங்கே – தலை

நரையுடை  முதுமகள் நம்மவள் எம்மை

நாள்தொறும் நினைப்பவள் வந்தி – அவள்

திரையுடை அலைகடல்  பூமியில்  பிள்ளைத்

திரவியம் இழந்தவள் அன்றோ – என்னை

வரையுடை இமயத்தில் வளைக்கரம் பற்றிய

வள்ளலே வழியினைக் காட்டாய்!     (பால்நினைந்து)

 

சிவன்:

 

பாண்டியர் நாட்டில் பரவிடும் வைகை

பார்வதி என்னருட் செயலே! – என்னை

வேண்டுதல் செய்வார் வேண்டுவ செய்வேன்

விதிகளை என்னருள் மாற்றும்! – தேவி

தீண்டுதல் செய்யா என்னையே எதுவும்

தெய்வங்கள் முதல்வனும் நானே! – என்றும்

மாண்டவர் பிறப்பார் பிறந்தவர் மாழ்வார்

மாற்றத்தைக் கடந்தவன் நானே!     (பாண்டியர் நாட்டில்)

 

செம்மனச் செல்வியாள் செய்திடும் துதியினைச்

சிந்தையில் விரும்பிய தாலே – நான்

அம்மகள் துயரினை ஆற்றவே சற்று

ஆறுத லாயினேன்  தேவி – அங்கே

வெம்மணல் வைகையை  விரைவினில் அடைக்க

வேண்டிய  செய்குவேன் நானும் – என்னை

இம்மையில் காணும் இயல்பினை பெற்றார்

இல்லையே மதுரையில் இன்றே!     ( பாண்டியர் நாட்டில்)

 

ஆவணி மாதத்து அழகிய மூலத்தில்

அடியவன் ஒருவன் வருவான் – அவன்

மாவணிப் பிட்டுக்கு மண்ணினைச் சுமந்தே

மன்னனின் தடியடி பெறுவான்! – அங்கு

பாவணி மாணிக்க வாசகன் பொருட்டாய்

பரியென நரிக்குலம் மாற – நாம்

தாவணி மாதுநின் மாநகர் கூடலில்

தனிவிளை யாடலைப் புரிவோம்!   (பாண்டியர் நாட்டில்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.