காட்சி ஒன்று! கவிதைகள் மூன்று!!
இலக்கியங்களில் மருதம் என்று சொல்வார்களே அந்த வயலும் வயல் சார்ந்த நிலமும் அது! அங்கே நெற்பயிர்கள் அடர்ந்து வளர்ந்து கதிர் பெருகி முற்றித் தலைசாய்ந்து அறுவடைக்குத் தயாரான காலம்! நெல் மணிகளின் பாரத்தால் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கும் காட்சியை மூன்று கவிஞர்கள் காண்கின்றார்கள்!
அவர்கள் உள்ளத்தின் தன்மைக்கு ஏற்ப அந்த ஒரே காட்சி வௌ;வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. உள்ளதை உள்ளவாறே அறிவிக்கும் அறிவியலில் இருந்து உள்ளதை உணர்ந்தவாறு தெரிவிக்கும் தன்மையினால் தானே கலை வேறு படுகின்றது. இங்கும் அப்படித்தான்!
அந்த வயற் காட்சியைப் பற்றி பிள்ளைக் கனி அமுது என்ற சினிமாப் படத்துக்காக மருதகாசி என்ற கவிஞர் ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை என்று ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாடலிலே கதிர் முற்றிய நெல்லும் வயலும் பருவம் அடைந்த ஒரு பெண்ணும் அவளின் அம்மாவும் போல தெரிந்தன அவருக்கு. அவர் வாழ்ந்த பிந்திய சமுதாய உணர்வை ஒட்டி அந்தக் காட்சி இந்தக் கவிஞர் நெஞ்சிலே உதித்தது.
வளர்ந்து விட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா? – தலை
வளைந்து சும்மா பார்க்கிறியே தரையின் பக்கமா – இது
வளர்த்துவிட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா? – என்
மனைக்குவரக் காத்திருக்கும் நீயென் சொத்தம்மா!
என்று தன் கவிதையை முடித்துக் கொண்டார் மருதகாசி! இங்கே நெல் தலை சாய்ந்து இருப்பது ஒரு பருவப் பெண் வெட்கத்தினால் தலை சாய்ந்து இருப்பது போலத் தெரிகிறது மருதகாசிக்கு! ஏன் அது சினிமா சார்ந்த உணர்வு! ஒரு வேளை அம்மாவுடன் வரும் நடிகைகளை பார்த்த உணர்வாகவும் இருக்கலாம்! அது குற்றமல்ல!
அடுத்து சோழ மன்னனிடம் நட்பு வைத்துக் குதூகலமாக ஆரம்பத்தில் வாழ்ந்த கம்பன் தன் இராமாணத்திலே இந்த வயற்காட்சியை பாட எடுத்துக் கொள்கிறான்!
அவன் பார்வையில் வயற்புறத்துச் சோலைகளிலே மயில்கள் ஆடுகின்றன. குளங்களிலே சிவந்த மொட்டுக் கட்டியிருக்கும் தாமரைகள் விளக்குப் போலத் தெரிகின்றன. மழை முகில்களின் இடியோசை தொடர்ந்து கேட்பது மயிலின் ஆட்டத்துக்கு மத்தளம் போல இருக்கின்றது. கணக்கற்றுப் பூத்திருக்கும் குவளை மலர்கள் பார்வையாளர்கள் போலத் தெரிகின்றன. அந்தக் காட்சியை சில சமயம் நீரலைகள் எழுந்து மறைப்பது திரைச்சீலை மூடித்திறப்பது போலவும் தெரிகின்றது கம்பனுக்கு! அத்தோடு வண்டுகள் செய்யும் இரைச்சல் யாழ் வாசிப்பது போலவும் உணர்கிறான் கம்பன். இதை எல்லாம் சொல்லி இந்த நாட்டிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அரசனைப் போல வயல் இருந்தது என்றான் அவன்!
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிகும் மாதோ!
அரசனுடைய அரண்மனைக்கு அடிக்கடி சென்று வந்த கம்பன் மனதில் அங்கு நடைபெறும் நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் மனதில் பதிந்து இருந்ததால் அரச சபையில் பெண்கள் ஆடும் ஆட்டம் போல மயிலாட்டம் வயலில் இருந்தது என்றுதான் பாட முடிந்தது. அது மனப்பதிவின் தாக்கமாக இருந்து பாடலாயிற்று கம்பனுக்கு!
மருதகாசியும் கம்பனும் பெண்ணைச் சம்பந்தப் படுத்தி வயற்காட்சியைப் பாட இன்னொரு கவிஞர் இவர்களுடைய உணர்வுகளை எல்லாம் புறந்தள்ளி விட்டுப் பக்தி ரசம் சொட்டச் சொட்ட வயற்காட்சியைப் பாடிவிட்டுப் போனார்! அவர் சேக்கிழார்!
இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவன் அன்புக்கு அடிமையாகி வாழும் இறை அன்பர்கள் அந்த இறைவன் வீற்றிருக்கும் ஆலய மண்டபத்திலே ஒன்று கூடுகிறார்கள்! அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசவும் இல்லை! நிறைந்த பக்தி உணர்வோடு தலை வணங்கி இறைவன் முன் நிற்கின்றாhகள்! அந்த அடியவாகளைப் போல இந்த நெற்பயிர்களும் வயலிலே தலை குனிந்து நிற்கின்றன என்று பக்தி உணர்வு மிக்க அடியவர்களை தலைசாய்ந்த நெல்லோடு ஒப்பிட்டு உவமை சொன்னார் சேக்கிழார்!
பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாமன்பர்
தத்தமுள் கூடினார்கள் தலையினால் வணங்குமாப் போல்
மொய்த்துநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலி எல்லாம்!
இங்கே சேக்கிழாரின் உள்ளம் பக்தி வசப்பட்டு இருந்த காரணத்தால் தலை சாய்ந்த நெற்பயிர்கள் பெண்ணாகத் தோன்றாமல் இறையடியவர்களை நினைவு படுத்தின அவருக்கு! அது மட்டுமல்ல கம்பரையும் மருதகாசியையும் விட உவமைப் பொருத்தம் என்பது சேக்கிழார் கவிதையில் தான் நிறைந்து இருக்கின்றது.
முற்றிய நெற்கதிகள் அறுவடைக்கு ஆட்பட்டு மரணத்தைச் சந்திக்க இருக்கின்ன. அது போல உலகியல் வாழ்க்கையினை நிறைவு செய்து கொண்டு பக்தர்கள் வீடுபேற்றை அடைவதற்காக இறைவனை தலை சாய்த்து வணங்குகின்றார்கள் என்று நெல்லின் முடிவையும் மனிதரின் முடிவையும் தொடர்பு படுத்திப் பாடிய புலவராகச் சேக்கிழார் தெரிவதற்குக் காரணம் பண்பட்ட உள்ளம் கொண்ட ஒழுக்க நெறியைக் கைக் கொண்டு வாழ்ந்த மனிதனாக அவர் இருந்தமையே ஆகும்!
எனவே எவ்வளவுதான் புலமை இருந்தாலும் ஒரு கவிஞன் தான் எடுத்துக் கொள்ளும் கவிப் பொருளைப் பாடும் போது அவன் மனம் சார்ந்த உணர்வுகளின் தாக்கம் கவிதையில் புகுந்து விடுகின்றது! இதற்கு எந்தக் கவிஞனும் விதி விலக்கல்ல இதைத்தான் வள்ளுவர் மனத்துள்ளது போலக் காட்டி மாந்தர்க்கு இனத்துள்ளதாகும் அறிவு என்று எழுதி வைத்தார்! இது கவிஞர்களுக்கும் பொருந்தும்!
தமிழர் தகவல் 5.3.2014 இதழில் வெளியான எனது கட்டுரை!