! கனவாய்ப் போன கனவுகள்

 

 

ஆண்டென்று பலகூடி அடுக்காகக் கழிந்தாலும்

அலைசோர்ந்து போவதில்லை – கடலென்றும்

ஆழத்தில் குறைவதில்லை!

 

தூணென்று நிமிர்ந்திட்ட தொடுவான மலையென்றும்

தோற்றத்தில் குறைவதில்லைப் – புயல்தாக்கித்

தோற்றதாய்க் கதையுமில்லை!

 

வீணாகிப் பலகாலம் விரைவாகக் கடந்தாலும்

வெடிக்காமல் தணிவதில்லை – எரிமலைகள்

விறகாகி மடிவதில்லை!

 

வான்நீளம் ஆனாலும் வலஞ்செய்ய நிலவென்றும்

வாழ்க்கையில் மறுப்பதில்லை – முகில்கண்டு

வழிமாற்றிக் கொண்டதில்லை!

 

தேன்தேடித் திரிகின்ற திரளான தேனீக்கள்

தென்றலை இரசிப்பதில்லை – திசைமாறித்

தேவையை மறப்பதில்லை!

 

கான்பூத்த மலர்கண்டு களவேங்கைப் புலியென்றும்

களிப்புற்று நின்றதில்லை – முட்கீறும்

கவலைக்கும் பணிந்ததில்லை!

 

தானாகி ஐம்பதெனும் தடங்காட்டும் வயதொன்றும்

தமிழீழப் புலிகட்கில்லை – பகைமீது

தாவிட வயதொன்றில்லை!

 

களமாடி நின்றாலும் கடலோடிச் சென்றாலும்

கவலைகள் குறையவில்லை – தமிழீழம்

கனகாலம் சிரித்ததில்லை!

 

வளமான வாழ்வியலை வரலாற்றை வர்த்தகத்தை

வளர்க்கவும் முடியவிலை;லை – பகையெம்மை

வாழவும் விடவுமில்லை!

 

குளமோடும் மீனுக்கும் கொக்குக்கும் ஒருபோதும்

கொள்கைகள் இணைவதில்லை – சுவைகண்ட

கொலையெண்ணம் மறைவதில்லை!

 

பிளவாக்கிப் பிரதேசப் பகையூட்டும் நரிபோன்ற

பெரியோர்கள் குறையவில்லை – நப்பாசைப்

பெருச்சாளி அழியவில்லை!

 

இளவேங்கைப் புலியாகி ஈழத்தின் தாய்போல

இருப்போர்க்கு வயதும் இல்லை – அதைநாமும்

எண்ணியும் பார்த்ததில்லை!

 

தளமோடிப் பகைசாய்கும் தமிழீழ மறவருக்குக்

தனியான வயதுமில்லை – அதுவெங்கள்

தமிழீழ நெறியிலில்லை!

 

குறிபார்த்த படையோடு குலங்காக்க நிற்கின்ற

கொள்கையின் வயதை எண்ணித் – தமிழர்கள்

கொஞ்சுதல் வழக்கமில்லை!

 

இரா.சம்பந்தன் (கனடா ஈழநாடு 2005)a

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.