என் கவிதை!
கல்லாத பலரின்று போட்டுக் கொள்ளும்
கவிஞரெனும் பட்டமெலாம் எனக்கு வேண்டாம்!
பொல்லாத வேலையது புனையும் பாட்டைப்
போற்றிடவே ஒருசிலரே எனக்கு வேண்டும்!
நல்லாக எழுதுகிறார் என்றே சொல்ல
நான்தேடும் மானுடர்கள் இவர்கள் அல்ல!
எல்லோரும் புகழ்கின்ற பாட்டுச் செய்ய
என்னாலும் முடியாது! எந்தன் நெஞ்சில்
நில்லாமல் பாய்கின்ற எழுத்து வெள்ளம்
நெடுந்தாளில் பரவுவதென் கவிதை யாகும்!
கொல்லாது இலக்கணத்தை எந்தன் பாடல்!
குரைக்காது யார்மனதும் நொந்து போக!
வெல்லாது தோற்றாலும் எந்தன் பாடல்
விரல்விட்டு எண்ணும்சிலர் மனதில் நிற்கும்!
நெல்லாகக் கொடுக்கத்தான் முடியம் என்னால்
நீங்கள்தான் சோறாக்கி உண்ணல் வேண்டும்!
வல்லார்குத் தமிழ்தெரிந்த மனமுள் ளார்க்கு
வரைவதன்றி என்கவிதை தெருவில் போகும்
செல்லாத காசெல்லாம் திரும்பிப் பார்க்க
செய்வதல்ல என்பதுவென் செய்தி யாகும்!