இறைவன் கேட்ட மருந்து!
இறைவன் கேட்ட மருந்து!
வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன்
வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான்
தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன்
துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான்
புகழ்காண வழிசொல்லு இறiவா என்றேன்
தவழாதே எழுந்துநில் என்றே சொன்னான்
தவறான வழிவேண்டாம் வாழ்வில் என்றேன்
தெரிந்துகொண்டு திருப்பிவிடு இறைவன் சொன்னான்
மதிவேண்டும் கூராக என்றும் கேட்டேன்
மனக்கல்லில் தீட்டிக்கொள் இறைவன் சொன்னான்
தோல்வியிலா நாளெனக்கு வேண்டும் என்றேன்
பொறாமையிலா நாளாகப் பார்ப்பாய் என்றான்
பணம்வேண்டும் இறையோனே என்று கேட்டேன்
பிணமானால் உதவாது என்றே சொன்னான்
அடுத்திருந்து கெடுப்பவர்கள் பற்றிக் கேட்டேன்
அதற்கேனும் மருந்திருந்தால் எனக்கும் என்றான்!