இறைவனும் கொரோனாவும்!
இறைவனும் கொரோனாவும்!
உருவகக் கவிதை
கொலைவெறியில் அலைகின்ற கொரோனா தன்னைக்
கூப்பிட்டான் கிட்டடியில் இறைவன் ஓர்நாள்
தலைநிமிர்ந்து நின்றபல நாட்டை எல்லாம்
தன்னுடைய தொற்றுதலால் வீழ்த்திக் காட்டி
நிலைகுயைச் செய்துவிட்ட கொரோனா சென்று
நின்றதந்த இறைவனிடம் கைகள் கூப்பி
கலைநிலவை தலையணிந்த இறைவன் சொன்னான்
கொரோனாநீ யாழ்ப்பாணம் போதல் வேண்டும்
வலைவிரித்து இயமனவன் முயன்று பார்த்து
வரவழைக்க முடியாத கிழவி ஒன்றைக்
கொலைபுரிந்து கொண்டுவர வேண்டும் நீயும்
கொடுக்கின்றேன் வேலையிது என்று கூறி
முலைதளர்ந்த தமிழ்கிழவி விலாசம் தன்னை
முன்வைக்க கொரோனாவும் எடுத்துக் கொண்டு
மலைகடந்து ஆறுகடல் தாவிச் சென்று
மனந்தளராக் கிழவியது வீட்டைப் பார்க்கும்
கால்வைத்தால் கொன்றுவிடும் குப்பை மேனி
கணக்கின்றி வளவெல்லாம் முளைத்து நிற்கும்
சீல்வைத்த கதவெனவே நிற்கும் வேம்பின்
சில்லென்ற காற்றாலே நடுங்கும் கொரோனா
பல்வைத்துக் கடிப்பதுபோல் முட்கள் கொண்ட
பரந்துநின்ற தூதுவளை இலையால் வந்த
செல்வைத்து அடித்ததுபோல் மணத்தைக் கண்டு
செல்லவங்கு முடியாமல் தூர நிற்கும்
வாயாலே உட்புகலாம் என்று பார்த்தால்
வழியில்லை வெத்திலையும் சுண்ணாம்பு கொல்லும்
ஓயாத முக்காலே நுளையலாம் தான்
ஒளிவீகும் பவுண்மின்னிக் கல்லே கொல்லும்
பாயாது வாத்தையொன்றும் காதில் ஆனால்
பஞ்சுமயிர் சீயாக்காய் அரப்பு வேண்டாம்
தாயாச்சி பாவியவள் திண்ணை கூடத்
தான்மாட்டுச் சாணத்தால் மெழுகி விட்டாள்
நிலமிழுத்த பனங்கிழங்கும் ஒடியல் மாவும்
சாறணையும் கொத்தமல்லிச் சரக்கும் பசளி
கலமிதக்கும் மோர்க்குழம்பும் பாவற் காயும்
கரியவிலைத் தேயிலையும் உணவாய்க் கொள்ளும்
குலமதனில் பிறந்தமுதுக் கிழவி காட்டிக்
கொண்டுவா உயிரென்றால் முடியு மாமோ
சிலபொழுது இன்னும்நான் இருந்தால் இங்கே
செத்துவிட்டேன் என்பதுவே முடிவாய்ப் போகும்
சிந்தனையில் ஆழ்ந்துவிட்டுக் கொரோனா தப்பிச்
சீக்கிரமே ஓடியது இறைவன் முன்னால்
தந்தபணி முடிக்கவில்லை இறைவா அந்தத்
தாயவளின் வீட்டினிலே இலுப்பம் கொட்டை
கந்தைகளில் கிடக்கிறதே தட்டி தோறும்
கடவுளறியாத தொன்றா என்ன செய்வேன்
வந்துவிட்டால் தானாக அன்றி ஆச்சி
வாழ்கையினை முடிக்கவொரு வைரஸ் இல்லை
நாணமுடன் தலைகுனிந்து கொரோனா சொல்ல
நன்றியென்று அனுப்பிவிட்டு உமைக்குச் சொன்னான்
வேணுமென்று தானிந்த கொரோனா கையில்
வேலையிதைக் கொடுத்துவிட்டேன் இல்லை யாகில்
காணுகின்ற மானுடர்கள் அனைவர் மீதும்
கைவைக்கும் நோயிதற்கு தன்னைக் கொன்று
பேணியுயிர் வாழுமுறை தெரிந்தார் பற்றித்
தெரியாமல் போயிருக்கும் என்றான் ஈசன்!