இது உண்மையானால்?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் முதற் கொண்டு திராவிடத் தலைவர்களாலும் திவ்வியப் பிரபந்தம் முதற்கொண்டு சமய இலக்கியங்களாலும் சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தி இராவணன் ஆண்ட இலங்கை இன்றைய எம்முடைய இலங்கைதான் என்பதாகும்!
கம்பனைப் பின்பற்றி இந்தக் கருத்தை நாமும் ஏற்றுக் கொண்டு அசோக வனமும் இலங்கையில் தான் உள்ளது என்று சொல்லி வருகின்றோம்! இதன் அடிப்படையில் மத வாதிகளால் யாழ்ப்பாணத்துக்கும் பெரு நன்மைகள் தரக் கூடிய சேது சமுத்திரத் திட்டம் பல இன்னல்களுக்கு உள்ளாகி இருந்தது.
இராவணன் எங்களுடையவன் இராவணனை அழிப்பதற்காக இராமர் கட்டிய பாலம் தான் இன்று கடலடியில் கிடக்கும் சேது அணை என்ற கூற்றை எல்லாம் ஆதாரங்களோடு மறுத்து இந்து சிந்தனை என்ற இதழின் ஆசிரியரான எஸ்.பி குட்டி என்பவர் அறிவுக்கு எட்டிய கடவுள் என்று ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
இந்த நூலை எழுதிய குட்டிக்கும் பல சிறப்புக்கள் உண்டு. இவர் பகவத் கீதையில் நிபுணத்துவம் பெற்றவர். பி.ஜே.பி யின் மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர். இந்துக்கள் வாழ்வுரிமைச் சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1965 இந்திய பாகிஸ்தான் போரில் இராணுவ அதிகாரியாக களத்தில் இருந்தவர்.
இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை! இராமாயணத்துக்கம் இலங்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பவை இவரது அசைக்க முடியாத கருத்துக்கள் ஆகும்.
அநுமன் மகேந்திர கிரியில் ஏறி நின்று பார்த்த பிரதேசம் இலங்கை அல்ல அது ஆந்திரக் கடற்கரையில் ஒரிசாவை ஒட்டி இருக்கின்றது. மகேந்திர கிரியில் ஏறி நின்று பார்த்தால் இலங்கை தெரியாது! ஒரிசாவின் மரங்கள் அடர்ந்த இந்தத் தீவுதான் தெரியும் என்று நிறுவியுள்ளார் குட்டி!
வான்மீகி முனிவரும் கம்பரும் சொல்கின்ற கிட்கிந்தை தண்டகாரண்யம் விந்திய மலை கோதாவரி நர்மதை ஆறு பஞ்சவடி அயோத்தி சித்திரகூடம் எல்லாமே இந்தியாவுக்குள் தான் இருக்கின்றன. இராமாயணம் கடல் கடந்து எங்கும் நடந்து விடவில்லை என்பது இவரது வாதமாகும்!
இராமன் வனவாசம் சென்ற 14 ஆண்டுகளில் முதல் 10 வருடங்களும் அலகாபாத்துக்கு அருகில் சித்திரகூட ஆச்சிரம வாசிகளோடு போய் விடுகின்றன. வனவாசம் முடிய ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் தான் அலகாபாத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் பஞ்சவடிக்கு வருகின்றான். இங்கு வைத்துத் தான் சீதை கடத்தப் படுகின்றாள்.
பஞ்சவடியில் இருந்து 40 கி.மீ. தூரம் நடந்து கிடகிந்தைக்கு வரும் இராமன் அநுமன் ஆட்களின் துணையோடு 4 நாடகளில் படைதிரட்டிக் க ொண்டு நடந்தே மகேந்திர கிரிக்கு வருகின்றான். அங்கிருந்த காட்டு வாசிகளின் உதவியோடு செடி கொடிகளால் பாலம் கட்டி ஒரிசாவுக்குள் நுழைந்து விடுகின்றான்.
கிட்கிந்தையில் இருந்து பங்குனி மாதம் உத்திரத்தில் புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ;ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு திரும்பி விட்டான்.
ஆக கிட்கிந்தையில் இருந்து மகேந்திர கிரிக்கு போக 4 நாட்கள்! பாலம் கட்ட 5 நாட்கள்! போர் நடத்த 8 நாட்கள் என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாக இருக்கின்றது. இதைத்தான் வான்மீகி இராமாயணக் கணக்குச் சொல்கிறது.
இதை விடுத்து கம்பன் சொல்வது போல வட இந்தியாவில் உள்ள கிட்கிந்தையில் இருந்து தென் இந்திய முடிவிலுள்ள இராமேஸ்வரத்துக்கு படை பரிவாத்தோடு நடந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது ஆறு மாதங்களாவது தேவைப்படும். ஏனெனில் கிடகிந்தைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள தூரம் 1500 கி.மீ க்கும் சற்று அதிகமாகும்!
ஒரு மனிதக் காலடியால் 1500 கி.மீ தூரத்தை நடந்து கடக்க எவ்வளவு காலம் செல்லும் என்று பகுத்தறிவு வாதிகளே சிந்தியுங்கள் என்று குட்டி சொல்லும் போது கம்பராமாயணத்தை மூடி வைத்துவிட்டு தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைதான் பலருக்கும் ஏற்படுகின்றது.
இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டும் குட்டி அவர்கள் அதர்மத்துக்கு எதிராகப் போராடி வீர புருஷனாக வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன் இராமன். அவனைக் கற்பனையில் தோய்த்துக் களங்கப் படுத்தாதீகள் என்ற வேண்டு கோளுடன் தன் நூலை நிறைவு செய்கின்றார்.
இவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் என்பது போல அவரின் நூல் வெளியீட்டு நாளிலேயே அவர் வீட்டுக்குப் பெற்றோல் குண்டு வீசப்பட்டு இருக்கின்றது!