அவளுக்கு!
நான்
காதலித்தவளே
நீ நன்றாகத்தான்
வாழ்கிறாய்
கைப்பிடித்வனோடு!
நான்
காதலித்தவளே
நீ குற்றமற்றவளாகத்தான்
வாழ்கிறாய்
குழந்தைகளோடு!
என் ஹண்டா பைக்கில்
என் வயிற்றை
அணைத்தபடி
நீ இருப்பாய்!
யாழ்ப்பாணத்துத்
தெருக்களில்!
இருட்டில்! அன்று
உன்
பெருவிரல் சிலவேளை என்
வயிற்றைத் தடவும்!
சிறுவிரல் நகமோ
வயிற்றில் குத்தும்!
உன்னையும் அறியாமல்!
ஆனால்
நான் விரும்பியது
பின்னால் இருந்து
குனிந்து நீ
கதை கேட்கும்போது
காற்றிலே பறந்து
என் கன்னத்தை
தடவிய உன்
கூந்தலையும்
என்காதின்
ஓரத்தைச் சுட்ட
உன்
கனல் மூச்சையும்தான்!
ஒருவேளை நான்
உன் கையை
விரும்பியிருந்தால்
நீ இன்றும்
என்னுடன்
இருந்திருப்பாய்!
நம்
குழந்தைகளோடு!
ஆனால்
அது காதலல்ல
வாழ்க்கை!
வாழ்க்கை
நமக்கு எதுக்கு?
என்றைக்கும்
நீ எனக்குத்
தெய்வமாக இரு!
தூரத்தில்
இருந்து
வணங்கிக் கொள்கிறேன்
பக்தனாக!
பூசாரிப்
பதவி தந்து
என் பக்தியைத்
தொழிலாக்கி விடாத
உன் நேர்மை
எனக்குப்
பிடிச்சிருக்கு!
இன்றைக்கும்!