அன்பு இல்லமும் – ஈழநாடும்
விடுதலைக்குப் போராடிய குற்றத்துக்காக வீதியிலே வீசப்பட்ட இனமாக இன்று இருக்கும் தமிழ் குலம் தாய் நாட்டிலே அடைந்து வரும் துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை! அந்தத் துயரங்களை முடிந்த அளவுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய இதழ்களில்; கனடா ஈழநாடு முதன்மையானது ஆகும்!
வு.மு. பரமேஸ்வரன் அவர்களால் 1994ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகை பல்வேறு கள மாற்றங்களைத் தன் எழுத்து முனைக்குள் கொண்டுவந்து விடுதலைக்கு உரம் கொடுத்த பத்திரிகை ஆகும். இன்று அது தனது இருபதாவது ஆண்டில் காலடி பதிக்கின்றது.
அசைக்க முடியாத வாசகர் வட்டத்தை கொண்டிருக்கும் ஈழநாடு இன உணர்வுப் பிரச்சனையில் நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானம் செய்து இயங்கிய இதழ் என்றால் அது மிகையாகாது.
தான் போற்றிய விடுதலை ஈழ நாட்டிலே சிதைக்கப்பட்ட பின்பு இனி என்ன செய்வது என்று கை பிசைந்து நிற்காமல் முன்பை விட அதிக வேகத்தோடு செயற்படத் தொடங்கியது ஈழநாடு.
இயலாமையின் விளிம்பில் இருந்த ஈழ மக்களை அரவணைத்து ஏதாவது செய்தாக வேண:;டும் என்று முனைப்புக் காட்டிய ஈழநாட்டின் கண்களிலே முதலில் தென்பட்டவர்கள் ஏதுமற்ற ஏதிலிகளாக நின்ற ஈழத்துச் சிறார்களே!
திண்ணைப் பேச்சுக்களை புறந்தள்ளி விட்டு யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும் என்ற உணர்வோடு கே. புத்மநாதன் அவர்களின் முயற்சியினால் அன்பு இல்லம் என்று மீள் கட்டுமானத்துக்கு கொண்டுவரப்பட்ட பழைய செஞ்சோலை இல்லத்துக்கு ஆதரவாக பின்வருமாறு எழுதியது ஈழநாடு.
நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்றது சங்க இலக்கியம். ஆம்! எங்கள் மண்ணிலே சிதறிக் கிடக்கும் சிறார்களை எல்லாம் பொறுக்கி எடுத்துத் துலக்கி ஒளிர வைக்க உதயமாகி இருக்கிறது அன்பு இல்லம்!
அன்புக்கு அரசியல் கிடையாது! அன்புக்கு மொழி கிடையாது! அதற்குச் சாதியும் கிடையாது! அன்பு எப்போதும் உருகிய இரும்பு போன்றது! அதிலே மாசுகள் படிவதில்லை! அது இறுகிவிட்டால் அதன் உறுதியையும் யாரும் எதுவும் செய்துவிட முடியாது!
அந்த அன்பின் பேராலே அமைந்து எங்கள் திக்கற்ற சிறுவர்களுக்கு திசைகாட்ட முற்படும் அனைத்து உள்ளங்களையும் நாம் நெஞ்சார வாழ்த்துகிறோம்! வயிற்றுக்குச் சோறு மட்டுமல்ல வாழ்க்கைக்குக் கல்வி அறிவையும் அன்பு இல்லம் வழங்கிட வேண்டும்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து ஆதரவு காட்டாமல் அனாதைகளாகி அல்லற்படும் அனைத்துச் சிறார்களைபும் அன்பு இல்லம் அரவணைக்க வேண்டும்! அதற்கான உதவிகளை செய்வதில் அனைவருமே பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆதரவற்று தெருவில் நிற்கும் குழந்தைகளை விட எந்த ஆதாரமும் அற்ற கையறு நிலையில் இருக்கும் முதியோர்களின் மடியில் உறங்கும் ஏழைக் குழந்தைகளே இன்று அதிகமாக காணப்படுகிறார்கள். அவர்களையும் அன்பு இல்லம் கூவி அழைத்து அரவணைக்க வேண்டும்!
சிறந்து வாழ்ந்த எங்களைச் சுனாமி அழித்தது. போர் சிதைத்தது! அந்த துன்பமான காலமெல்லாம் எஞ்சிய குழந்தைகளுக்கு வேண்டாம் என்று இறைவனை வேண்டிக் கொண்டு அன்பு இல்லம் தன் பணிகளைத் தொடரட்டும்! அதனை உலகம் ஆதரிக்கட்டும்! வாழ்த்துக்கள்!!
இந்த எழுத்து ஆதரவோடு மட்டும் நின்று விடாமல் பணம் திரட்டி அனுப்பும் காரியத்திலும் இறங்கியது ஈழநாடு! வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதது எல்லோர்க்கும் என்ற பாரதியின் வார்த்தைக்கான முயற்சிகள் ஒரு புறமும் அறிவுக் கண்களைத் திறக்க நினைக்கும் ஈழத்து ஏதுமற்ற மாணவர்களுக்குக் கல்வியும் என்று இரு வேறு தடங்களில் பயணத்தைத் தொடங்கியது ஈழநாடு!
கல்வித் திறமை இருந்தும் பொருள் வசதியற்ற மாணவ மாணவிகளை வன்னிப் பிரதேசத்தில் இருந்து இனங்கண்டு உதவி கோரி படங்களுடன் வெளியிட்டது. குடும்ப நிலை படிக்க நினைக்கும் துறை என்ற விபரங்களோடு வெளியான ஈழநாட்டின் வேண்டு கோள் மனசாட்சியும் இரக்கமும் குடிகொண்ட பல புலம் பெயர் தமிழர்களை வன்னியைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த மாணவர்களையும் மாணவிகளையும் போட்டி போட்டுக் கொண்டு தாங்கிப்பிடிக்கப் பலர் முன்வந்ததற்கு ஈழநாட்டின் தொடர் பிரசாரம் என்றால் யாரும் மறுக்க முடியாது.
அது போல போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களை எடுத்துக் கொண்டால்
உணவு இல்லை உடை கிடையாது அவற்றைத் தருவதற்கு பெற்றோர் கிடையாது என்று சீரழிந்து புண்ணிய பூமியான அன்பு இல்லத்தில் அடைக்கலம் பெற்றிருந்த சிறார்களுக்கு செய்யும் பணியே ஒரு புனிதப்பணி என்று முடிவெடுத்த ஈழநாடு அதற்கான ஆக்க பூர்வமான செயல் திட்டங்களை முன்னெடுத்தது.
பெரும் பொருளைச் செலவு செய்து பிறந்தநாள் நினைவு நாட்கள் என்று பணத்தைக் கரியாக்கும் புலம்பெயர் தமிழ் மக்களை ஏக்கத்தோடு பார்த்தது ஈழநாடு. உங்கள் புண்ணிய நாட்களில் அன்பு இல்லக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்களேன் என்ற ரீதியில் செய்திகளைப் பிரசுரித்தது அது.
ஈழநாட்டின் அறைகூவல் கல் மனங்களையும் கரைத்திருக்க வேண்டும். ஒன்று இரண்டாகத் தொடங்கிய இந்தப் புதிய கலாச்சாரம் இன்று ஈழநாட்டின் பக்கங்களை முழுமையாக நிறைத்து நிற்கின்றது. இன்று யாரும் ஈழநாட்டின் பக்கங்களைப் புரட்டினால் தங்கள் பிறந்த நாளுக்கு தம் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு பெற்றார் இறந்த நாளுக்கு என்று வன்னி அன்பு இல்லக் குழந்தைகளுக்கு உணவளித்து போற்றியவர்களைப் பரவலாகக் காணலாம்! இது கனடா ஈழநாடு ஈழத்து மக்களுக்குச் செய்த மிகப்பெரிய உதவியாகும்!
அன்பு இல்லக் குழந்தைகளின் வயிற்றுக்குச் சாப்பாடு மட்டும் இட்டு அவர்களை ஏதும் அற்றவர்களாக என்றம் இருத்தி விடக் கூடாது என்ற எண்ணத்தில் 2012ம் ஆண்டு புரட்டாதி 23ல் பிரபல தென்னிந்திய இசையாளர் ஒருவரை உள்ளக்கிய கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதனால் கிடைத்த பணத்தை அவர்களின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக ஈழநாடு அனுப்பி வைத்தது.
புலம் பெயர் தமிழர்கள் கன்னை பிரிந்து நின்று காலத்தைக் கடத்தும் கனடாவில் தன் பத்திரிகையின் பலத்தை தமிழ்ச் சமுதாயத்தின் துன்பங்களைத் துடைக்கத் திசை திருப்பிய அதன் ஆசிரியர் பரமேஸ்வரன் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஏனெனில் இந்தத் தொண்டு பற்றி யாரும் எழுதி விட்டுப் போகலாம். ஆனால் அதை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்கள் கொஞ்சமல்ல! உணர்ச்சியின் விளிம்பில் நின்று உதவி செய்வதாக ஒத்துக் கொண்ட பின்னர் இயலாமையால் அதை மீறுவோர் பலர். அவர்களின் சுய ரூபம் தெரியாமல் பின்னால் அலைந்து ஏமாறிக் காலவிரயம் செய்யும் நாட்களும் உண்டு.
சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு நிற்காமல் போய்விடும் பலரையும் சந்திக்க நேரிடும் இந்த யாசகத்தில்! இதற்கென்று மனிதாபிமானத்தைத் தவிர வெற சட்டங்கள் இல்லாத காரணத்தால் தோல்வி இலகுவாகப் பற்றிக் கொண்டு விடும்! காசோலைகள் திரும்பி விடும்!
இதையெல்லாம் வன்னியிலே பசிக்கும் குழந்தை வயிறு கேட்குமா? ஆனாலும் பல நல்லவர்கள்! பல வல்லவர்கள் பின்புலமாக இருந்து ஈழநாட்டை நேசிக்கிறார்கள்! அவர்கள் விளம்பர தாரர்களாக வாசகர்களாக எழுத்தாளர்களாக நண்பர்களாக ஈழநாட்டைச் சூழ்ந்து கொண்டு அரன் செய்கின்றார்கள்! அதனால் ஈழநாடு நிமிர்ந்து நடக்கின்றது.
வருங்காலத்தில் இந்தப் பணிகளை ஈழநாடு விரைவு படுத்த வேண்டும்! அடித்துக் கொள்பவர்கள் அவர்கள் கிடக்கட்டும்! அரசியலும் கிடக்கட்டும்! தன் ஆதரவாளர்களின் வட்டத்தைக் கடந்து அதற்கு அப்பாலும் வன்னிக்கு உதவி கேட்டு எழுத வேண்டும்!
குறிப்பாக கனடா வாழ் தமிழ் மாணவர்கள் மத்தியில் வன்னித் துயரங்களை மேலும் விதைக்க வேண்டும்! அதற்காக பக்கங்களை ஒதுக்கி மாணவ சமுதாயத்திடம் இருந்து செய்திகளையும் செயற்பாடுகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்!
இன்றைய சூழ்நிலையில் விடுதலையை நேசிக்கும் பலரின் நம்பிக்கை நட்சத் திரமாக விளங்கும் ஈழநாடு மேலும் வீறு நடை போட எல்லாம் வல்ல இறைவன் என்றும் துணை செய்வானாக!
20 வது ஆண்டில் தடம் பதிக்கும் ஈழநாடு இதழில் 12.4.2013 வெள்ளிக்கிழமை பிரசுரமான கட்டுரை