திருவள்ளுவர்
Maniam Shanmugam
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது.
மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
வாழ்க்கை
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.
மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
நூல்கள்
• திருக்குறள்
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:
• ஞான வெட்டியான்
• பஞ்ச ரத்னம்
இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[8]:
“அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே”
இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது.
அந்த நூல்களில் முக்கியமானவை:
• சுந்தர சேகரம்
இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன.
திருவள்ளுவரும், சைனமும்
திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.
திருவள்ளுவரும், சைவமும்
திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர் ]இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள் . திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்], ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.
சான்றுடன் திருவள்ளுவரின் காலம்:
அரை நூற்றாண்டிற்கு முன், வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்ததாகத் தெரிகிறது. சங்க காலங்களில், புலவர்கள், அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே, பரிசுகள் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள், தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க காலப் புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும், ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர், அப்போரில் வெற்றி பெற்றவர்கள், தமிழ் அரசர்களே என்றும், ஆயினும், சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை, பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
அதாவது இப்போர்கள், அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை எனத் தெளிவாகத் தெரிகிறது. இவை, அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும், மாமூலனார், மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம், மாமூலனார் காலம் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே, வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஆரியர்கள் பொ.ஊ.மு. 600 வாக்கில், தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது. திருவள்ளுவ மாலையில் தொகுக்கப்பட்டிருக்கும் மாமூலனார் பாடல், திருவள்ளுவரின் சாதி பற்றிப் பாடுகிறது. இதற்கு மாற்றாக, ‘தங்கம் நிகர் காலம்’ என்று அறியப்படும் சங்க காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. ஆதலால், சாதி ஏற்றத்தாழ்வு ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு எழுந்த மாமூலனார் என்னும் பெயரைக் கொண்டு விளங்கிய இன்னொரு புலவரைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்குவனார் முதலிய தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். “திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல்” (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85) என்னும் கருத்தும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது.
ஆரியனான விஜயன் என்பவன், பாண்டியன் மகளைத் திருமணம் செய்த பிறகு பொ.ஊ.மு. 543ல் இலங்கையை அடைகிறான். இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக, ஆரியர்கள் பொ.ஊ.மு. 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், திருக்குறளில் 12000க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களையும், 50க்குக் குறைவான வடமொழிச் சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயினும், மறைமலை அடிகள், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பாரதிதாசன் போன்றோர் மேற்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர். தேவநேயப் பாவாணர் 16 (வடமொழிச்) சொற்கள் இருப்பதாகவும், சி. இலக்குவனார் 10க்குக் குறைவாக இருப்பதாகக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. ஆனால், தேவநேயப் பாவாணரின் மாணவரும் தமிழறிஞருமாகிய இரா. இளங்குமரன் மற்றும் புலவர் குழந்தையும், திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல் என்று சொல்கின்றனர். மேலும், ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றிய குறிப்பும், ஆரியர்கள், தமிழகம் நுழைந்த பிறகு, இந்திரனைப் பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர், திருக்குறளை, ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரிய வருகின்றன. இதன் மூலம், வள்ளுவர் காலம், குறைந்தது பொ.ஊ.மு. 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்.