கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும்
கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும்
தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தன்னையும் நாட்டை விட்டுத் துரத்திய அண்ணன் வாலியைக் கொல்ல இராமனின் உதவியை நாடுகிறான் சுக்கிரீவன். இராமனும் உன் அண்ணனைக் கொன்று உனக்கு நாட்டையும் மனைவியையும் மீட்டுத் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விடுகிறான்.
எழுபது வெள்ளம் குரங்குப் படையோடு பெரிய வில் வீரர்களான இராமனும் இலட்சுமணனும் அணைகட்டி பதினெட்டு மாதங்கள்; போராடிக் கொன்ற இராவணனை இலகுவாக வென்றவர்கள் இரண்டு பேர்கள் மடடுமே. சிவபெருமான் இராவணன் கயிலை மலையை எடுத்த போது விரலால் அழுத்தி வைத்திருந்தார்.
அவரிடம் இருந்து விடுதலை வேண்டி இராவணன் ஆயிரம் வருடங்கள் அழுதான். இராவணன் என்ற சொல்லுக்கு அழுதவன் என்று பொருள். அவருக்குப் பின்பு சிவ பூசைக்காக நந்தவனத்திலே பூப்பறித்துக் கொண்டிருந்த வாலி அத்து மீறி வந்து இடையூறு செய்த இராவணனை அடித்துக் கைது செய்து தன் வாலிலே கட்டிக் கொண்டு மலைக்கு மலை தாவினான் என்பது வரலாறு.
அத்தகைய பலசாலியான வாலியைக் கொல்லலாம் என்று இராமன் சொன்னாலும் அதில் சுக்கிரீவனுக்கு நம்பிக்கை இல்லை. காட்டிலே நின்ற ஏழு மரா மரங்களைக் காட்டி இராமனே இந்த மராமரங்களின் வைரத்தன்மை போன்றது வாலியின் உடம்பு. இந்த மரத்திலே ஒன்றை உன் அம்பு துளைக்கும் என்றால் தான் அந்த அம்பு வாலியின் மார்பையும்; துளைக்கும். எனவே எனக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஒரு மரத்தை உன் அம்பினால் துளைத்துக் காட்டு என்றான்.
இராமனும் அந்த ஏழு மராமரங்களையும் ஊடுருவிச் செல்லும் வண்ணம் தன் அம்பைச் செலுத ்தினான். இது கம்பராமாயணம். இந்த இலக்கியச் செய்தி உண்மையோ பொய்யோ என்பதல்லப் பிரச்சனை. மராமரத்தை துளைக்க அனுப்பப்பட்ட அம்பு என்ன செய்தது என்று கம்பன் சொல்வதில் தான் இன்றைய விஞ்ஞானம் தலையிடுகிறது.
இராமனால் செலுத்தப்பட்ட அம்பு தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து ஏழு உலகங்களையும் துளைத் து ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களைபும் துளைத ்து இனித் துளைப்பதுக்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது. ஆனால் இனியும் ஏழாக ஏதும் சேருமாயின் போய்த் துளைக்கும் இதோடு நிற்காது. என்கிறான் கம்பன்.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.
இன்றைய வல்லரசுகள் ஏவுகணைகளை வைத்திருக்கின்றன. இன்றைய விஞ்ஞானத்தின் அதியுயர் கண்டுபிடிப்பாக இமைப் பொழுதில் தானாகவே சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்த ஏவு கணைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பத்தை உணர்ந்து தாக்கக் கூடியவை. அதிர்வை உணர்ந்து இலக்குகளைக் கண்டு பிடிப்பவை. கதிரியக்கங்களை துல்லியமாக அறிந்து தாக்குதல் தொடுப்பவை என்று அவை முன்னேறி விட்டன.
இவற்றில் ஒன்று கூட ஏவப்பட்ட ஒரு தடவையிலேயே பல இலக்குகளைத் தேடி அழிக்கும் திறன் அற்றது. ஓன்றை அழிப்பதற்கு ஒரு ஆயுதம் என்ற நிலையில் இன்றைய விஞ்ஞானம் நிற்கின்றது. ஒரே ஏவு கணையால் இரண்டு இலக்குகளைத் தாக்கியதாக செய்தி எதுவும் இதுவரை இல்லை.
ஆனால் கம்பன் காட்டும் ஏவு கணைக்கு இடமோ பொருளோ இலக்கு அல்ல. ஏழு என்ற இலக்கம் தான் இலக்கு. அதனால் ஏழாக இருந்த எல்லாவற்றையம் துளைத்தது. ஒரு கணை பல இலக்குகளைத் தாக்கும் செய்தி நாசாவின் செய்தி இதழில் அல்ல கம்பராமாயணத்தில் மட்டும் தான் உண்டு.
இதிலே வியப்பு என்னவென்றால் எப்படி ஏழு என்ற எண்ணை மட்டும் ஏற்றுக் கொண்டு தாக்குதல் தொடுத்தது இராமனின் அம்பு? மிகவும் துல்லியமாக ஆறு எண்ணிக்கை கொண்டவற்றையோ எட்டு எண்ணிக்கை கொண்டவற்றையோ ஐந்தையோ தாக்காமல் ஏழை மட்டும் தாக்கியது எப்படி? இன்றைய கணணிக் கட்டளை மையங்களுக்கும் சவால் விடும் செய்தியல்லவா இது?
ஏழு மராமரங்களையும் துளைக்க ஒழுங்கு செய்த போது ஏற்பட்ட தவறால் அந்தக் கணை எல்லை மீறி ஏழு இலக்கமுள்ள எல்லாவற்றையும் தாக்கும் நிலை ஏற்பட்டதா? ஏனெனில் அப்படி எல்லாவற்றையும் தாக்கிக் காட்டித்தான் சுக்கிரீவனை நம்பவைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு இருக்கவில்லை.
அவன் ஒரு மராமரத்தைத் துளைக்கும்படிதான் கேட்டான். இராமன் அவன் கேட்டதுக்கு மேலாக ஏழு மரங்களைத் துளைப்பதொடு நின்றிருக்கலாம். ஆனால் ஏழாக இருந்த எல்லாவற்றையும் காரணமின்றித் தாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இராமன் தற்பெருமையை விரும்பாத பாத்திரம் ஆயிற்றே! தன் வீரத்தைக் காட்ட இப்படிச் செய்திருக்க முடியாது. தாக்குதல் கட்டளையில் தான் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். இவையெல்லாம் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகும்!
…………………….