ஆத்மாவின் இராகங்கள்

இதயத்தின் கதவுகள் என்ற தலைப்பில் 80ம் ஆண்டு தினகரன் வாரமலரில் தொடர்ந்து வெளிவந்ததும் பின்பு கனடா தமிழோசை பத்திரிகையில் ஆத்மாவின் ராகங்கள் என்ற பெயரில் 92ம் ஆண்டில் மீள் பிரசுரம் செய்யப்பட்டதுமான இக் குறுங்காவியம் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடிய சீதனப் பிரச்சனையின் ஒரு பதிவாகும்! இதை எழுதிய போது எனக்கு வயது இருபத்தியொன்று! காவியத்துக்காக தினகரன் வழங்கிய காசோலையைக் கூடப் பணமாக்கி விடாமல் போற்றிப் பாதுகாத்தேன்! என் கைவிட்டுப் போனவற்றில் அதுவும் ஒன்றாகி விட்டது! கனடாவில் எனது இலக்கிய முயற்சிகள் அனைத்துக்கும் பிரதிபலன் கருதாது பின்புலமாக இருக்கும் இனிய நண்பர் ஞானபண்டிதன் அவர்களுக்கு இக்காவியம் சமர்ப்பணமாகும்!
– இரா. சம்பந்தன்
காவியம்
அந்தக் கல்லூரி
வெண்முகில்கள் தவழ்கின்ற மாட உச்சி!
வேங்கைமரம் மலைவேம்பு வாகை என்ற
மண்வளரும் மரவினங்கள் கவிந்த சூழல்!
மாணவரும் மாணவிய மலர்கள் தானும்
கண்கவரும் வெண்மைநிற உடையில் கூடும்
கல்லூரி அதுவாகும்! அன்னார் அங்கே
விண்ணுலக அமுதமெனும் கல்வி மாந்தி
விளையாடி மகிழ்வுடனே வீடு செல்வர்!
சின்னஞ்சிறு பிள்ளைகளோ அங்கும் இங்கும்
சிரிப்புடனே ஓடிவிளை யாடும் போதில்
புன்முறுவல் ஒன்றாலே உலகை வெல்லும்
பூவையரும் கொடிபோல அசைந்து செல்வர்!
அன்னவரின் முழந்தாளைத் தடவும் சட்டை
அதன்கீழே பாதணிகள் பின்னால் நின்று
மின்னாத முகில் கொண்ட வானம் போல
மிதக்குமொரு கூந்தலவர் அழகைச் சொல்லும்!
அலைகடலில் பிறப்பெடுக்கும் முத்தை அள்ளி
அரவுதிர்க்கும் மலைப்புறத்து மணியும் சேர்த்துச்
சிலை வடிக்கும் தங்கத்தைத் துகளாய்த் தூவிச்
சிலவிடத்தில் மாங்கனியும் தூங்கச் செய்து
கலைபயில விட்டதுபோல் பாடம் கேட்கக்
கன்னியர்கள் உயர்வகுப்பில் கூடு வார்கள்!
வலைவிரித்துப் பார்த்திடுவார் அவரை வீழ்த்த
வகு ப்பிருக்கும் மாணவர்கள்! ஆனால் தோற்பார்!
புருவத்தை வில்லாக வளைத்தே அன்னார்
பூப்போலும் பார்வையினை நாணாய்ப் பூட்டி
பருவநிலை உணர்வுகளை அம்பாய் வைத்துப்
பைந்தமிழின் காதலெனும் நஞ்சும் தோய்த்துத்
தெருவதனில் செல்கின்ற இளைஞர் நெஞ்சைத்
தீயாகத் துளைத்துப்பின் இதழ்கள் என்ற
உருவதனில் புன்னகையை மருந்தாய்க் காட்டி
உயிர்கொடுக்கும் கலையறிந்த நிலையில் நின்றார்!
ஊர்க்கதைகள் பேசுவதும் உயர்ந்த காதல்
உணர்வுகளைப் பேசுவதும் சினிமாப் பார்த்து
நீர்விழியில் மல்கிடவே அதனைப் பற்றி
நினைவிழந்து பேசுவதும் இனிய பாடல்
சீர்முறையில் பாடுவதும் கண் ணால் வெட்டிச்
சிக்னல்கள் கொடுப்பதுவும் காலால் தொட்டு
நேர்முகமாய் ஆசிரியர் நிற்கும் போதும்
நினைத்தகதை கூறுவதும் என்று வாழ்ந்தார்!
அங்கே ஒரு ஆசிரியன்
கல்வியெனும் பயிர்வளர உரமாய் நிற்கும்
கல்லூரி ஆசிரியர் கூட்டம் தன்னில்
சொல்லுணர்வில் பணிவுடமை தோன்றப் பேசி
சூடான மனங்களையும் குளிரச் செய்யும்
நல்லுணர்வைப் பெற்றிட்ட ஒருவன் வாழ்ந்தான்
நல்லிளைஞன் ஜெயதெவன் என்னும் பேரோன்
செல்லுகிற இடமெல்லாம் சேர்சேர் என்னும்
சிறப்பினையே காதேற்கும் புகழைக் கொண்டான்!
உயர்வகுப்புப் பிள்ளைகட்கே கல்வி ஊட்டும்
உயர்நிலையை அவன்படித்து உயர்ந்த போதும்
தயவுணர்ந்து பழகிடுமோர் தன்மை யாலே
தானவரின் அன்புக்கே உரியன் ஆனான்!
அயலவரின் வகுப்புக்கும் அமைதி யாக
அவன்கல்வி போதிக்கும் நிலையைக் காண
மயல்பெருகும் மாணவர்க்கு அன்னான் மீத ு
மனதவனை நிறுத்தியவர் பாடம் கேட்பர்!
நல்லவர்கள் இருப்பதனை உலகம் கண்டால்
நல்லதுநீர் இருமென்றே விடுமோ ஐயா?
வில்லெனவே வளைந்தெல்லாம் வேலை பார்த்து
விரட்டியதன் பின்பேதான் உறக்கம் கொள்ளும்!
கல்லூரிக் குள்ளேயும் எதிர்ப்பார் உண்டு
கருத்தரங்க மேடைகளில் எதிர்ப்பார் உண்டு
எல்லோரும் ஒன்றாக முயன்று ஈற்றில்
யாரினையோ பிடித்தவனை மாற்றம் செய்தார்!
வீட்டினிலெ தாய்தந்தை அக்கா உண்டு
வெளிநாட்டில் அண்ணனென்ற புகழும் உண்டு
நாட்டினிலே ஆசிரியர் பட்டம் உண்டு
நல்லவர்கள் பலருடைய நட்பும் உண்டு
ஏட்டினிலே கதையெழுதும் புலமை உண்டு
என்றாலும் ஒன்றில்லைப் பணமே இல்லை!
நீட்டுதற்கும் ஆளில்லை ஆனால் இங்கே
நிம்மதியைக் கெடுத்திடவோ நாய்கள் கோடி!
கண்காணா இடத்துக்கு மாற்றம் என்றே
கைகளிலே கிடைத்திட்ட கடிதம் கண்டான்
கண்ணோடு கண்ணாகப் பழகி வாழ்ந்த
கல்லூரிப் பிள்ளைகளே கண்முன் நின்றார்
பெண்ணோடு உடன்பிறந்த பாவத் தாலே
பிழைப்புக்கு வழிதெடித் தோட்டம் செய்தால்
மண்ணோடு பயிர்வளரும் நேரம் தன்னில்
மாற்றத்தைத் தந்தவர்கள் நீடு வாழி!
நாமார்க்கும் குடியல்லோம் என்று பேச
நாவேந்தர் அப்பரது பிறப்போ நாங்கள்?
சீமான்கள் பணத்தாலே ஏவும் பேயை
செகத்தினிலே ஏழைகளால் தடுக்க லாமோ?
பாமாவும் ருக்மணியும் கிடைத்தால் போதும்!
பழிபாவம் அன்னாரின் நினைவில் ஏது?
ஏமாற்றம் நெஞ்சத்தைச் சூழ்ந்து வாட்ட
எல்லோர்க்கும் இடமாற்றச் சேதி சொன்னான்!
அரசாங்கச் சம்பளமோ கொஞ்சம் தானே
ஆகையினால் வேலையினை விட்டால் என்ன
மரபாக நாம்செய்யும் தோட்டம் தன்னை
மதிப்போடு நீசெய்தால் போதும் தம்பி
அரவாடும் புற்றருகே வாழ்தல் போல
அயலூரில் சென்றுழைக்க உன்னை விட்டு
இரவோடு பகலாக நெஞ்சம் ஏங்க
இயலாதே என்றழுதாள் அன்னை தானும்!
பதவியினை விட்டிடலாம் ஆனால் இந்தப்
பாரினிலே சனமெல்லாம் பதவி தேடிக்
கதவுகளைத் தட்டுகின்ற காலம் தன்னில்
கைவிட்டால் செல்லாத காசாய்ப் போவேன்
பதரோடு கலந்திருக்கும் நெல்லைப் போல
பாவியரும் நல்லவரும் கலந்து வாழும்
மிதவாதப் போக்குலகில் ஒழியும் நாளே
மீண்டுமொரு புத்துலகம் உதய மாகும்!
அலையெழுந்து தாலாட்டும் அகிலம் தன ்னில்
ஆங்காங்கே வாழ்பவரைப் பகுத்துப் பார்த்தால்
சிலைவடிக்கும் கைத்திறனும் சிறந்த பாடல்
செய்தளிக்கும் புலவர்களும் தெய்வம் வாழ
மலைகுடைந்து கோவில்களும் மானம் காக்க
மதயானைப் பிடரேறிப் பொருத வேந்தும்
நிலைகுலையா மொழிவளமும் நிறைந்த நாங்கள்
நினைவுதரம் தாழ்ந்ததனால் நிலையில் கெட்டோம்!
அக்காவின் திருமணத்தை முடித்தற் காக
அவசரமாய் எனக்கும்பெண் தேடிப் பார்ப்பார்
தக்கோர்கள் யாரென்று பார்க்க மாட்டார்!
தரும்கையின் கனவளவே கருத்தில் நிற்கும்
எக்காலம் திருந்திடுமொ எங்கள் நாடும்
என்றிந்தச் சீதனத்துக் கழிவு நாளோ?
நக்காத இலையில்லை நாய்கள் ஆனால்
நாயைவிடக் கேடாக நடக்கின் றோமே!
பிறக்கின்றோம் பிறந்தவுடன் பாசம் என்ற
பிணப்பாலே தொடுபட்டோம் தொடுத்த மீதி
திறப்பிலாச ் சமுதாயப் பூட்டி னாலே
திறனின்றி உடனேயே பூட்டிக் கொண்டோம்!
மறக்கின்றோம் எங்களையே நாங்கள் ஒன்றும்
மாறாட்டம் கொள்வதற்குப் பித்தர் அல்ல
இறக்கின்றோம் இறுதியிலே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நாம்வைத்த வடுக்கள் இலட்சம்!
சாதியெனும் பிரச்சனைகள் தமக்கு வந்தால்
சாதியினை ஒழிக்கவென்று கூட்டம் கோடி!
பாதிவரை சீதனத்தைப் பேசித் தோற்றுப்
பலனில்லை என்றவுடன் எதிர்ப்புக் கூச்சல்!
ஆதிவரை குலம்பற்றித் துருவி ஆய்ந்து
அப்பாலும் முடியுமெனில் எட்டிப் பார்க்கும்
நீதியலாச் சமுதாய அடிகள் தாங்கி
நினைவிழந்து கிடக்கிறதே தருமம் இங்கே!
பொங்கிடுவான் ஜெயதெவன் இதயம் நொந்து
புதுமைகளைச் சமுதாயம் மறுத்தல் எண்ணி
எங்களுக ்கு இதுதானே வாழ்க்கை என்று
ஏழைமனம் கவலையுடன் சொல்லிக் கொள்ளும்
திங்கள்தவழ் சடையிறைவன் என்பா னிங்கே
திரிலோக சங்காரம் செய்தே மீண்டும்
செங்குருதி தனிலன்பு உண்மை நேர்மை
சேர்ந்தோடும ் மனிதர்களைப் படைப்ப தென்றோ?
சிந்தனைகள் சுழன்றிடவே பாயைப் பொட்டு
சிற்றோலைக் குடிசையதன் திண்ணை மீது
பந்தமுற்ற காதலிபோல் தென்றல் வந்து
பாயோடு சேர்த்தணைத்துத் தடவிச் செல்ல
சொந்தமன உழைவெல்லாம் நீங்கி உண்மைச்
சுகமொன்றைக் கண்டவனாய் உறங்க லானான்
இந்தநிலை ஒன்றினிலே மட்டும் தேவன்
இதயமது கவலைகளை மறந்தே வாழும்!
பிரிந்தொருவர் போகின்ற நேரம் தன்னில்
பெருமைக்கு உபசாரம் உலகம் செய்யும்
பரிந்துரைகள் பலபேசும் பாசம் காட்டும்
பதைக்கின்றோம் எனச்சொல்லும் மாலை போடும்!
அரிந்தெடுத்து அகற்றிவைத்த பெரியார் கூட்டம்
அன்பொழுகப் பிரிவுப சாரம் என்றே
தெரிந்தெடுத்து விழாவொன்றை நிகழ்த்த உண்மை
தெரியாதோர் கவலையுடன் கூடி நின்றார்.
வெள்ளமென மாணவர்கள் கூடி நின்று
வெம்பியழ மேடையிலே பிரிவு நாளில்
உள்ளமுவந் தளித்தபா ராட்டைப் பெற்று
உரைநிகழ்த்த ஜெயதெவன் எழுந்து நின்றான்
துள்ளுகின்ற மொழிநடையில் வயிற்று நோவைத்
தூண்டுகின்ற சிரிப்பெழவே பேசி வந்த
தெள்ளுதமிழ் உரைவிட்டுக் கேட்போ ரெல்லாம்
தேம்புமொரு குரலினிலே பேச லானன்!
என்னருமைப் பெரியவர்காள்! இங்கு தோன்றும்
என்னினிய நண்பர்களே! கல்வி கற்றுப்
பின்னுமொரு அன்பாலே வளரும் எங்கள்
பிள்ளைகளே! மாணவர்காள்! வணக்கம் சொன்னேன்!
என்னுடைய வாழ்வினிலே ஏனோ உங்கள்
இன்முகத்தைப் பிரிந்தேகும் இந்த நாளோ?
புன்னகையைத் தினம்பார்த்த முகங்கள் கூட
பொலிவிழந்து விடைதருமிக் காட்கி ஏனொ?
பெரியவர்கள் பாதமதைப் போற்றி வாழும்
பேறெனக்கக் கிடைத்ததென மகிழ்வாய் வாழ்ந்தேன்!
தரிசனமாய் உங்களையே மீண்டும் என்று
தரணியிலே காணுவதோ அறியேன் நானும்
உரியுமொரு ஆடையினைக் கைகள் ஓடி
உடுப்பதுவே உயர்நட்பாம் என்றே சொன்ன
புரிநூலில் துணிநெய்த புலவன் சொன்ன
புத்தகத்தின் வழிநடந்த நண்பர் வாழி!
மாணவர்காள் உங்களையே வாழ்க்கை என்ற
மணல்தீவில் விடுகிறது கால வெள்ளம்!
பேணரிய கல்வியெனும் பயிரை நட்டுப்
பிறர்புகழ ஒழுக்கமெனும் நீரை ஊற்றிக்
காணரிய சோலையென வாழ்வை யாக்கல்
கடமையென நீருணர்ந்து கொள்ளல் வேண்டும்!
பாணரிந்து உண்ணுகின்ற வறுமை யேனும்
பண்புடனே இருந்திடலே உண்மை வாழ்வாம்!
உறவென்ற ஒன்றாலே இணையும் போதில்
உணர்வுகளும் மனங்களிலே கலத்தல் உண்மை!
சிறக்கின்ற பெருமகிழ்வு சிந்தை நோதல்
சீறிவரும் பெருந்துயரம் பிரிவு எல்லாம்
அறமென்ற ஒன்றுணர்த்த அன்றே அந்த
ஆண்டவனால் தரப்பட்ட அமைப்பே ஆகும்!
பறக்கின்ற காலமெனும் பறவை யாலும்
பலமாற்றம் வாழ்க்கையிலே வந்து போகும்!
ஆகையினால் நடப்பதையே காணல் வேண்டும்
அதைமீறிச் செயற்படுதல் பெருமை யல்ல!
சாகையிலே எதைக்கொண்டு போவோம் நாங்கள்?
சந்தனமா? சாக்கடையா? எனவே நாமும்
வேகையிலே துன்பமெலாம் தாங்கி மீண்டும்
வெந்தவுடன் உணவாகும் அரிசி போல
தோகைமயில் பார்வதியைப் பாகம் கொண்டான்
தூயமலர்ப் பாதமதைப் போற்றி வாழ்வோம்!
உரைமுடித்து ஜெயதேவன் இறங்கி வந்தான்
ஊரவர்கள் அவனுக்காய் இரங்கி நின்றார்!
கரையறியாக் கலம்போல கலங்கி மீண்டும்
கல்லூரி தனைவிட்டு நடக்க லானான்
தரைதடவும் பார்வையுடன் அன்னான் செல்லத்
தடுத்திட்டார் மாணவர்கள் சிறிது நேரம்!
நிரைநிரையாய் நின்றவர்கள் பிரிவு பேசி
நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளும் போதில்!